சுவர்களில் விளம்பரம் செய்ய தடை! மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!!

மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்பு செயலாளர் எஸ்.எம்.ஜைனுல் ஆபிதீன் வெளியிட்ட அறிக்கை:

 

அரசு கட்டிடங்களில் மட்டுமல்ல, தனியார் சுவர்களிலும் விளம்பரங்கள் செய்யவும், சுவரொட்டிகள் ஒட்டவும் தேர்தல் ஆணையம் தடை விதித்ததை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. இதற்கு ஏற்கனவே மாநில சட்டமும் ஒப்புதல் அளித்திருப்பதால் இந்த முடிவை உறுதியாக அமல்படுத்த முன்வர வேண்டும்.

 

தேர்தல் செலவுகளை குறைக்கும் நடவடிக்கைகளில் இது முக்கியமானதாகும். இதன் மூலம் ஆடம்பர விளம்பரங்கள் ஒரு கட்டுப்பாட்டுக்கு வரும் என்பதில் ஐயமில்லை.

 

அதுபோல் கட்அவுட்டுகள் வைப்பதையும், ராட்சத டிஜிட்டல் தட்டிகளையும் தடை செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். இதர சிறிய வடிவ விளம்பரங்களையும், நேரடியாக மக்களை சந்திக்கும் யுக்திகளையும் அரசியல் கட்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் இதனால் நேர்மையானவர்களும் எளியவர்களும் தேர்தலில் பங்கேற்கும் வாய்ப்புகள் பிரகாசமடையும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.